ULLAM

About Us

welcome to Ullam

‘உள்ளம்’ – கொக்குவில் வளர்மதி முன்னேற்றக்கழகம் மற்றும் சனசமூகத்தின் வெளியீடு – 1989இலும் பின்னர் 2001இலும் இருதடவை பிரசவித்து, இடையில் தடைப்பட்ட  கலை, இலக்கிய, சமூக சஞ்சிகை. மூன்றாம் தடவை இணையத்திலும்  அச்சுப்பதிப்பாகவும்  உறுதியாக தடம் பதிக்க விழைகிறது  2021ல்.

இலைமறைகாயாக மறைந்திருக்கும் படைப்பாளிகளுக்கும்,இளையதலைமுறை படைப்பாளிகளுக்கும் ஒரு களமாக உள்ளம் இருக்கும் என்பதை இத்தருணத்தில் உறுதியுடன் கூறும் அதேவேளை ஈழத்து  இலக்கியத்துக்காக அர்ப்பணிப்புடன் உழைத்து மறைந்த எமது மூத்த எழுத்தாள ஆளுமைகள் மற்றும்  எம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமைகள் பற்றிய பதிவுகளும் இங்கே இடம் பெறும் .

பாரெங்கும் பரந்து வாழும் எமது கழக அங்கத்தவர்கள் மற்றும் வளர்மதி சமூகத்தின் அளப்பரிய ஆற்றல்களை ஒருமுகப்படுத்தி மெருகேற்றுதல்  திறமையுள்ள இளையோருக்கு எழுத்துக்களம் அமைத்துக் கொடுத்தல் என்பனவே உள்ளத்தின் இரு முதன்மைக் குறிகோள்கள்.

சிறியதொரு வாசிகசாலையாக சில இளைஞர்களால் 1961ஆம் ஆண்டு விதையிடப்பட்ட வளர்மதி- விளையாட்டுக்கழகமாய், நிறைவாழ்வகமாய், சிறுவர்கல்வி, மகளிர் பிரிவு என அறுபது ஆண்டுகளில் ஆல விருட்சமாக விரிந்திட்ட தருணமதில் ‘உள்ளம்’ மீளவும் புதுமெருகுடன் இணைய வழியாகவும், அச்சு இதழாகவும் காத்திரமான கருத்துக்களுடன் களம் காண்கிறது.

இலாபமீட்டும் நோக்கமின்றி அறிவைப் பரப்பும், ஆற்றலை வளர்க்கும் தூய்மையான சமூகநோக்குடன் நாம் தொடங்கும் இந்த அறிவுப் பயணத்தில் எம்முடன் இணைய உலகெங்குமுள்ள தமிழ் உள்ளங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி!

“முயற்சி வெற்றி தரும்”

வெள்ளை நிறப்பூவுமல்ல
வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி
உத்தமனார் வேண்டுவது

– விபுலானந்த அடிகள்